Wednesday 8 October 2014

நாணற்ற நான்



வாழ்வின் முதலும் முடிவுமாய்
என்னைச் சுற்றி சொந்தங்களும் நட்புகளும்
கண்ணீர் சிந்தியபடி ...

என் குடும்பத்தினர் அழவும் திக்கற்று
பித்துப்பிடித்தவர்களாய்
ஆற்றி ஆறுதல் படுத்த நினைக்கிறேன்
ஆயினும் முடியவில்லை
அமைதியாய் கண்மூடியபடி...


கருவில் உதித்து பாதுகாப்பாய் வளர்த்த நாட்கள்
தவழும் போதும் தத்தி நடைபோடும் போதும்
தாங்கி வளர்த்த நாட்கள்

சிறுமியாய் பெற்றவர்கள் கைபிடித்து சுற்றிய நாட்கள்
பட்டாம்பூச்சியாய் விளையாடித் திரிந்த நாட்கள்
விடுமுறைக்காய் ஏங்கி பூர்வீகம் சென்ற நாட்கள்
கல்லூரிக் காலத்தில் விடுதியில் தங்கி
நண்பர்களுடன் கொண்டாடிய நாட்கள்
மனந்தவனோடு, நான் மடிசுமந்தவர்களோடு
கொஞ்சி மகிழ்ந்த நாட்கள்

வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
மனக்கண் முன் பிம்பங்களாய் தோன்றி மறைகின்றது
சில போராட்டங்களையும் சந்தித்து சலித்து போய் நான்
இதோ சிரித்து அழுது லயித்து ரசித்து வாழ்ந்த இல்லத்திலேயே
உயிரற்ற உடலாக...

இன்னும் சற்றுநேரத்தில் இங்கிருந்து பிரிந்து
தனிமை தீயில் நானும் கருகிடுவேன்
இருந்தும் நானின்றி அழுத
இரண்டு வயது தம்பி மகளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்
நாம் சாமியாகி விட்டதாய்...


Monday 6 October 2014

மன சாம்ராஜ்யம்



மகிழ்ச்சிப் பூக்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையும் இதுவே
மௌனக்கேவல் வெடித்துச் சிதறும் வெற்றிடமும் இதுவே

நான் மட்டுமே இங்கே ..
மன ஆட்சி நடக்கும் சாம்ராஜ்யத்தின் இளவரசியும் நானே
கடைநிலை பிரஜையும் நானே
எழுதியவையும் எழுதப்படாத வரைமுறைகளும் என் எல்லைக்கு உட்பட்டவையே


சில கனவுச்செடிகளுக்கு கண்ணீர்துளிகளே உரமானது இவ்விடமே
துளிர்விட்ட ஆசைகளின் இளந்தளிர்களை எவரும் அறிந்திடா அழிக்கவியலா ரகசியப் பெட்டகம் இதுவே

பொய்மை மரித்து நிஜம் உயிர்பெறும் நினைவறை
என்னில் நான் புதிதாய் பிறப்பதும் புதுப்பித்துக் கொள்வதும் இவ்விடம் மட்டுமே!!!


துளித்துளியாய் வார்த்தைகள்



சில வேளைகளில் நீ விட்டுச் சென்ற வார்த்தைகள்
என் மனக் கோப்பையை நிரப்பி
குழம்பி புலம்பி வழிகிறது

தித்திப்பாய், கசப்பாய், லயிப்பாய், வியப்பாய்...
கோப்பையை நிரப்பும் தருணங்களில்
என்னில் இருந்து கொஞ்சம் தூரமாய் நிற்கிறேன்


கோப்பையை நிறைத்துகிடக்கும் வார்த்தைகள்
சிந்துகின்றன மழை சிதறல்களாய்
சிரித்தப் படி நனையும் சிறு பிள்ளையென
வந்துவிழும் வார்த்தை துளிகளை
கையில் ஏந்தியபடி நான்

வார்த்தைகள் வற்ற காலியாகி கொண்டிருக்கிறது கோப்பை
சிதறிய வார்த்தைகளும் காலிக் கோப்பையுமாக நான் பெருவெளியை நோக்கியபடி
கையில் மீந்த வார்த்தைகளும் சிதறிக்கொண்டிருக்கிறது இப்போது...!