Thursday 15 January 2015

தைத் திருநாள் வாழ்த்துகள் .



தைமகளின் பிறப்பு
தரணியெங்கும் செழிப்பு
மதம்கடந்து இனம் கடந்து
நித்தம் உதிக்கும் கதிரவனுக்கு
நன்றி சொல்லிடும் நன்னாள்

வருடம் முழுதும் உழைத்துக் களைத்த
உழவர் களிக்கும் திருநாள்!
அவனுக்கிணையாய் கழனியில் கடமையாற்றும்
காளையின் பெருநாள்

குருதியை அமுதாக்கி அவனிகாக்கும்
ஆவினத் திருநாள்
அன்பும் பண்பும் ஒன்றாய் சூழ
மங்கையர் துணையை வேண்டும்
மாதவப் பெருநாள்

அல்லல்கள் மாய்ந்து
அரும்பிடும் இன்ப வாழ்வு
கவலைகள் கெடுக’வென்று
களித்திடும் இன்பத் திருநாள்

புது நெல்லை குத்தி
புத்தரிசி ஆக்கி,
புதுப்பானையில் இட்டு
சர்க்கரையும், வெல்லமும் சங்கமிக்க,
பொங்கல் அது பொங்கி வர,
குடும்பத்தோடும், சுற்றத்தோடும்
குலவையிட்டு, குதூகலிக்கும்
பொங்கல் திருநாள்

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துகள் .


Monday 12 January 2015

வ(வி)ழி தேடி தவிக்கும் நான்

 
இப்பிறவி கடந்தேறி
மீண்டும் பிறவா வரம் வேண்டுகிறாய் நீ
நானோ மறுபிறவிக்கு தவமிருக்கிறேன்
மனதினில் மட்டுமல்லாமல்
உன்னுள் கருவாய் , உருவாய்
உயிராய் ,மெய்யாய்
சேய் எனும் உறவாய் !!
வ(வி)ழி தேடி தவிக்கும் எனக்கு
விடியலே உன் விழிகளில் வேண்டும் என
தவமிருகின்றேன்
மனதால் மடி கிடத்தினாய்
மடி சுமந்து தாலாட்டும் காலத்துக்காய்
வரம் வேண்டி காத்திருக்கிறேன்
மகளென மனம் ஏற்றாலும்
உதிர உறவென்று பிணைத்து விட்டால்
அறுபடாது நம் உறவென்று
மீண்டுமொரு பிறவிக்கு தவமிருக்கிறேன்


கையறுநிலைக் காத்திருப்பு



உரிமையோடான நேசத்திற்கு
உளம் ஏங்கி உயிர்துடிக்கும்.

நெஞ்சில் வெடித்தெழும்
நேசத்தின் நிகழ்வுகளை
சொல்லொணா துயருடன்
சொல்லி அழாச் சுமையுடன்
காத்திருக்கும் கணங்கள்
கவியில் சொல்லிட முடிவதில்லை

காலாண்டு நீடிக்கவில்லை
கடல் போல அன்பு
காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க
காத்திருக்க மட்டுமே முடிகிறது முடிவின்றி

முடிவில்லா இப்பெருவெளியில்
அரவமற்று அனாதையாய் உணர்கையில்
உள்ளத்தெழும் உணர்வின் கொடுமையில்
உறக்கம் மட்டுமா தொலைந்து போவது?


அன்பால் மணம்வீசும் ...


ஒற்றைப் பூவை வரைந்து
கைகளில் தந்துவிட்டுகடக்கிறாய்
காற்றோடு மணம்வீச தொடங்குகிறது
அப்பூ
வியப்போடு சுவாசிக்க
நந்தவனமாய் உருப்பெறுகிறது
சற்றும் யோசிக்காது
சிறகுவிரிக்கிறேன்
பட்டாம்ப்பூச்சயாய் மாறி!!

குழந்தைமை


அன்புருகும் அன்னையாகி
அடி வயிற்றில்
இடுக்கிக் கொள்கிறேன்
நொடி நேர அயர்வில் நழுவிச் சென்று
குதித்தோடி விளையாடுகிறது
துயிலும் பாவனையில்
எப்போதும் விழித்துக் கொண்டிருக்கும்
என் குழந்தைத்தனம்

வேடிக்கையல்ல வாழ்க்கை



ஒன்றுமேயில்லை என்பதே
நியதியாகிறது முடிவில்...
ஆயினும் அனைத்திலும்
முடிவையே தேடி ...
இடைப்பட்டதின் லயித்தலை
தொலைப்பதே வாடிக்கையாக்குகிறோம்
வேடிக்கை வாழ்வதனில் !!



ஓவியமாய் நான் !!


மௌனம் வண்ணங்களால்
தனிமை தூரிகையில்
என்னைத் தீட்டிக்கொண்டிருக்கிறேன்
ஓவியமாய் !!

அன்பில் உயிர்த்த பட்டாம்பூச்சி


காகிதத்தில் தீட்டிய
பட்டாம்பூச்சி உயிர்த்துப் பறக்க,
சிறகில் அடிப்படுமென
சுழலும் மின்விசிறியின் விசையை அனைத்து
புன்னகை பூத்தது குழந்தை !!

கதைக்குள் வராத கானகம்



கதை சொல்ல கேட்ட குட்டி மீராவுக்கு
"ஒரு பெரிய காடு இருந்தது"என ஆரம்பித்தேன்
"காடு வேண்டாம் வேற சொல் "என்ற மீராவுடன்
கற்பனைக்குள் வராத கானகமும்
ஏக்கத்தோடு வெளி நின்று கதை கேட்டுச் சென்றது

Sunday 11 January 2015

சொந்தமுகம் தேடும் நான்


மகள்,
அக்கா ,
தங்கை ,
தோழி ,
மனைவி ,
தாய் ,
பாட்டி ,

இத்தனை முகங்களில்
எது என் சொந்த முகமென
தேடித் தேடி
முகமூடிக்குள் புதைந்து போகும் நான்
யார் ???


தளும்பும் நேசம்

முத்தமிட்டே கடந்தது
நமக்கான பொழுது
கடந்தும்
சுற்றிக் கொண்டே இருக்கின்றது
இச்செனும் சத்தங்கள்
வார்த்தைகளற்ற வெளியை
நிறைத்துத் தளும்புகிறது நேசம்
வெட்கம் பூசிய முகத்தோடு!!

சிறகு விரித்தாள் சின்ன தேவதை

நீட்டிய கைகளில்
மென் முத்தமிட்டேன்
உலகமே கைகளில் அடங்கியதாய்
சந்தோஷச் சிறகு விரித்தாள் குட்டி மீரா !!

அன்பின் தடமிது .

காலத்தில் ஈரமும்
கலந்திருப்பதால் தான்
இன்னும் காயாமல் பூத்திருக்கிறது
அன்று அம்மா பதித்து சென்ற
அன்பு முத்தம்!!


ஸ்ரீ வரைந்த மீன் தொட்டி



அஃகுவாரியம்(மீன் தொட்டியும், மீன்களும் ) 
வரைய சொன்ன அன்னையிடம்
கடல் வரைந்து காட்டுகிறான் ஸ்ரீ .
என்னடா என கேட்ட அன்னைக்கு
"நீ ஒன்று வரைய சொன்ன அம்மா ,
நான் ஒரு நூறு வரைந்திருக்கிறேன் " என
கண்களில் வண்ணம் மின்ன புன்னகைத்தான் !

மீண்டும் வானம்பாடியாய் !!



பெயரறியா பறவையொன்று இசைக்கிறது
என் கற்பனை வரிகளுக்கு
எனக்கு மட்டுமேயான இந்த பிரபஞ்சத்தில்
நாதம் எட்டிப் பார்த்ததாய் எண்ணம்

பாடிடும் மனம் பறக்கத் துடிக்கிறது
பழமைகள் நீங்கி புதிதாய்
தழுவிடும் காற்றின் எதிர்த்திசையில் சிறகசைத்து

மரபுகளுக்குள் சிக்கித்தவிக்கும் கனாக்கள்
மறுபிறவி கண்டன
லயத்தில் சேரா பாக்கள் உதித்தன புதிதாய்

கைதொடும் தூரமே வாழ்வெனும் பால்வெளி
எட்டித் தொட மனமின்றி
வானவில்லாய் வளைத்துப் பார்க்கச்
சிறகடிக்கிறது மனம் மீண்டும் வானம்பாடியாய் !!


அதீதம் தொலைத்த பொழுதொன்றில் ..



அடரிருளினும் கொடியதாய்
நிரவிகொண்டிருக்கிறது உன் நீள் மௌனம்

தினங்கள் யுகங்களாய் நகர
எங்கோ உள்மனவெளி அதிர்வுகளும்
நிசப்தமாக்கி கொள்(ல்)கின்றன

உன் அதீதம் தொலைத்த ஏதோ ஒரு நொடியில்
நீ மௌனம் தழுவிக் கொண்டாய்
அன்பினை எதிர்பார்த்துக் காத்திருந்த மனதினை
மௌனச் சிறையில் தாளிட்டேன்

இனியேனும் அன்பின் கரங்களை இறுக மூடிக்கொள்
நம் மௌனங்களில் புதைந்திருக்கும் துயரங்கள்
வேறெவரையும் சூழ வேண்டாம்

நுனியறியா இம்முடிச்சிகளில்
நாம் மட்டும் புதைந்து போவோம்

மௌனத்தின் பிடி தளரும் பொழுதுகளில்
மனதிற்கு சொல்லி வைத்தேன்
இனி எமக்குள் பொதுவானாதாய் வேறொன்றும் இல்லை
இந்த நீள் மௌனம் தவிர என